பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி

 

26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.

 

அரசாணை (நிலை) எண் 143, பள்ளிக்கல்வி (வி) துறை, நாள் 19.09.2011 இன் படி, 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

2013 – 2014 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

 

2014 – 2015 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தப்படுமா? செயல்படுத்தப்பட்டால் என்ன? செயல்படுத்தப்படாவிட்டால் என்ன? சாதக பாதகங்கள் என்ன? எவ்வாறு செயல் படுத்தலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் ஒரு முயற்சியே இது!

 

10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தினால் மாணவர்களின் தரம் பாதிக்கப்படும் (?) என ஒரு சாரார்; மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் போகும் என ஒரு சாரார்; மூன்று முறை அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிடலாம் என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிட்டு 11 ஆம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும், இது சாத்தியப்படுமா? என்பது குறித்த ஒட்டிய, எதிரான கருத்துக்களையும் அலசியதால் ஒரு சின்ன தெளிவு.

 

10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டையும் செயல்படுத்தலாம். மூன்று பருவங்களின் முடிவிலும் அரசு பொதுத்தேர்வு நடத்தலாம்.

 

வளரறித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் என்பதை அவ்வாறே நடைமுறைப்படுத்தலாம். அல்லது வளரறித் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என மாற்றியமைத்தும் நடைமுறைப்படுத்தலாம்.

 

முதலிரண்டு பருவங்களுக்கு பாடப்புத்தகங்களில், ஒவ்வொரு பாடத்தின்  இறுதியில் வினாக்கள் கொடுக்காமல் விட்டு விடலாம் அல்லது ஒரு மதிபெண் வினாக்கள் மட்டுமே கொடுக்கலாம். பாடப்பகுதி முழுமையிலும் ஒரு மதிபெண் வினாக்கள் இடம்பெறும் வகையில் முதலிரண்டு பருவங்களுக்கு ஒரு மதிப்பெண்களுக்கான தேர்வாக மட்டுமே நடத்தலாம். அதற்கு, இப்போதைய போட்டித்தேர்வுகளைப் போலவே [TNPSC தேர்வுகள், TET, etc] OMR coding sheet இல் விடையளிக்கச் செய்யலாம். இதைத் திருத்த ஆசிரியர்கள் அவசியமில்லை. விடைத்தாள் திருத்த அதிகம் செலவாகாது. மேலும் எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மாணவர்களின் நுண்ணறிவு வளர்ச்சியுறும். முழுமையாக, ஆழமாக பாடத்தை மாணவர்கள் கற்று, அலசி ஆராயும் திறனையும், படித்ததை சூழ்நிலைக்குப் பயன்படுத்தும் ஆற்றலையும், ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியையும் பெறுவர்.

 

2 அல்லது 2½ மணி நேரத்தில் எழுதக்கூடிய வகையில் 60 அல்லது 120 வினாக்கள் கொண்டதாக தேர்வை வடிவமைக்கலாம். இத்தகையத் தேர்வு பலவுள் வினா, சரியா? தவறா? எனக் காணல், தவறானவற்றைக் காணல், சரியானதைக் காணல், கொடுக்கப்பட்ட காலியிடங்களுக்கு சரியான விடையைத் தேர்வு செய்தல், படத்தில் குறித்துள்ள பாகத்தை கொடுக்கப்பட்ட விடைகளிலிருந்து  தேர்வு செய்தல், பொருத்துதல், கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்வு செய்தல் போன்ற பலவகை வினாக்கள் கொண்டதாக அமைக்கலாம்.

 

இத்தகையத் தேர்வுகள் மாணவரின் படிக்கும் ஆற்றலையும், படித்த பகுதியிலுள்ளதை உட்கிரகிக்கும் வேகத்தையும், அதைப் பயன்படுத்தும் லாவகத்தையும் மதிப்பிடுவதாக அமையும். அகில இந்திய அளவில் (உலகளாவிய அளவில்) நம் மாணவர் போட்டித்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், வெற்றிபெறும் அளவையும் நிச்சயமாக உயர்த்தும்.

 

 

 

மூன்றாம் பருவ முடிவில், மூன்றாம் பருவ பாடப்பகுதியில் சிறு வினாக்கள், குறு வினாக்கள் மற்றும் பெரு வினாக்கள் கொண்ட, இப்போதையத் தேர்வு போலவே நடத்தலாம். மாணவர்களின் எழுத்துப் பயிற்சியும், எழுத்தாற்றலும் வளரும். அவ்விடைத்தாள்களை இப்போது நடைமுறையில் உள்ளதைப் போன்றே ஆசிரியர்களைக் கொண்டு திருத்தலாம்.

 

முதலிரண்டு பருவங்களின் பாடப்பகுதி அடிப்படைப் பாடங்களை அதிகமாகக் கொண்டதாகவும், மூன்றாம் பருவப் பாடப்பகுதி புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகவும், பயன்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கலாம்.

 

மாணவர்கள் ஏற்கெனவே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்தேர்வு எழுதி பழக்கம் [பயிற்சிப்] பெற்றவர்களே! அவர்களுக்கு இத்தேர்வுகளைப் பற்றிய பயமோ, சிரமமோ இல்லை. மூன்று முறை பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அகலும்.

 

மூன்றாம் பருவங்களின் முடிவில், நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள், 50% வினாக்கள் மிக எளிமையானதாகவும், 20% வினாக்கள் சற்று கடினமானதாகவும், 20% வினாக்கள் கடினமானதாகவும் (புத்தகத்தில் உள்ள வினாக்கள்), 10% வினாக்கள் மிகவும் கடினமானதாகவும் (புத்தகத்தில் இல்லாத வினாக்களாகவும்) இருக்க வேண்டும். மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடும் தேர்வாக மட்டுமே தேர்வு அமையக் கூடாது. அப்பொழுதுதான் மாணவர்களின் தரம் முழுமையானதாக மதிப்பீடு செய்யப்பட்டதாக அமையும்.

 

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தி, அதற்கான மதிப்பெண்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிடுவதைப் போலவே வளரறி மதிபெண்களையும், அதற்கான தரத்தையும் ஒப்படைத்துவிடலாம்.

 

மூன்று பருவங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு, இப்போது மற்ற வகுப்புகளுக்குச் செய்வது போலவே சராசரி கண்டுபிடித்து தரம் வழங்கலாம். கல்வித்தரம் சிறிதும் பாதிக்கப்படாது. ஒரு பருவத்தேர்வை சரியாக எழுதாதவர் அல்லது தேர்வை எழுத முடியாதவர்கள் அடுத்தத் தேர்வினை நன்முறையில் எழுத வேண்டும், அதிக மதிபெண் பெற வேண்டும்  என்ற எண்ணம் உருவாவதால் மாணவரின் கற்றல் திறனும் மேம்படும். இடைநிற்றலும் குறையும் அல்லது இருக்காது.

 

மதிப்பெண் சான்றிதழில் வளரறி மதிபெண்களுக்கான தரத்தையும், தொகுத்தறி மதிபெண்களுக்கான தரத்தையும் அச்சடித்துக் கொடுக்கலாம். அதனால் மாணவரின் கல்வித்தரத்தினை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

 

அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவில் கணினி மையங்களை அமைத்து, OMR coding sheet ஐத் திருத்தவும், ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் வளரறி மதிப்பெண்களையும், மாணவர்கள் பெற்ற தொகுத்தறி மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதும் எளிதே!

 

மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தற்போதுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிடலாம். அப்பள்ளிகளை இதுவரை கவனித்து வந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் உருவாக்கப்படும் கணினி மையங்களை ஒப்படைத்து விடலாம்.

 

எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும், சில பல உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளதைப்போன்றே, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கலாம். ஒவ்வொரு பருவ முடிவிலும் OMR coding sheet ஐத் திருத்துதல், ஆண்டு இறுதியில் தொகுப்பு மதிபெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பிற பணிகளுக்கு அவ்வாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாசிரியர்கள் மூலம் கணினி கல்வி கற்ற, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விலையில்லா கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி கல்வி கற்கவும் நல்ல வாய்ப்பு உருவாகும்.

 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் [Trimester pattern and CCE] இடைநிலைப் பள்ளி அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்.

 

மாணவர்களைத் திட்டக் கூடாது, கண்டிக்கக்கூடாது என ஆசிரியர்கள் கையைக் கட்டிப்போட்டதால், மாணவர்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் குறைந்துவிட்டது. மாணவர்களிடையே ஒழுங்கீனமும், கீழ்படியாமையும் அதிகரித்துவிட்டது. எந்த ஆசிரியரும் காலையில் எழுந்தவுடன், இன்று யாரையாவது அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறானவர்களே என எண்ணுவதும் தவறே!

 

ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பைக்காட்டி, பொறுமையாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற முடிவை எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வகையான மாணவர்களுக்கும் செயல்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதற்கு பல காரணங்கள் (ஆசிரியர் எண்ணிக்கை குறைவு, மாணவர் எண்ணிக்கை அதிகம், ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்கள், இன்ன பிற…) உள்ளன. எனவே, ஆசிரியர்கள் கண்டிப்பையும், கவனிப்பையும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஆசிரியர்களிடமிருந்து கண்டிப்பையும், பிரம்பையும் அகற்றியதன் விளைவு மாணவர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. சிறு சிறு கண்டிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் கூட மாணவர்கள் விபரீத முடிவை நாடுகின்றனர். மாணவர்களிடையே சமூக அக்கறையின்மையும், சுயநலமும், பொறுப்பற்றத்தன்மையும் அதிகரித்துவிட்டது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால், போலீஸின் கைகளில் உள்ள பிரம்பிற்கு வேலை அதிகரித்துவிட்டது. மாணவர்கள் சில ஆசிரியர்களைத் (பேராசிரியர்களைத்) தாக்குவது, முதல்வர்களைக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடிகின்றனர்.

 

அனைவருக்கும் கல்வித் திட்டமும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமும் நடைமுறையில் உள்ளதால், நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவோம்! தோல்வியடைய மாட்டோம்! நாம் படிக்கவிலை என்றாலும், தேர்வை சரியாக எழுதவில்லை என்றாலும், தேர்வையே எழுதவில்லை என்றாலும் நம்மை ஆசிரியரால் தோல்வியடையச் செய்ய முடியாது என்பதை அறிந்த சில மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களை சில மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எவ்வகையிலும் ஆசிரியர் கூறுவதைச் செய்வதில்லை. இத்தகைய மாணவர்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆசிரியர் மாணவர் உறவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய குறைகளை உரிய வகையில் தீர்க்க வேண்டும். இது அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.

 

S. ரவிகுமார், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அரங்கல்துர்கம், வேலூர் மாவட்டம் – 635811

sivaravi196310@gmail.com, Mobile No. 9994453649

Advertisements
Posted in EDUCATION - கல்வி | பின்னூட்டமொன்றை இடுக

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!

013 – 2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1. தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல்.
2. இயல்பாகவே புதிய பள்ளிச் சூழ்நிலை அவர்களுக்கு ஒருவித அச்சத்தையும், தயக்கத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தும். (சிலரால் நமக்கே ஏற்படும் என்பதும் உண்மை!) அதைத் தவிர்க்க ஆவன செய்தல்.

3. விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வரைபடநூல்கள், புத்தகப்பைகள், காலணிகள், வரைபடப்பெட்டிகள், சைக்கிள்கள், மடிக்கணினிகள், . . . . . போன்றவற்றை மாணவ, மாணவிகளுக்கு வழங்க உதவிடுதல்.
4. வருங்கால சமுதாயத்தின் ஓர் அங்கமாகப் போகும் இன்றைய மாணவ, மாணவிகளை ஒழுக்கத்தோடும், நல்சிந்தனையோடும், பொதுநல நோக்கோடும் செயல்பட அவர்களுக்குத் தேவையானவற்றை நயமாக நல்கிடவும், அழகாக அறிவுறுத்திக் கூறவும், அல்வழி போகாதிருக்க நல்வழி காட்டிடவும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து சக ஆசிரியர்களுடன் ஆசிரியர்களையும் கலந்தாலோசித்து நன்கு திட்டமிட்டுக்கொள்ளுதல்.
5. வருங்கால வலிமையான, சிந்தனை வலிமை மிக்க, திறன் மிகுந்த, அறிவு வளமிக்க, பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள, இரக்க குணம் நிரம்பிய, தேவையானவர்களுக்கு உதவியை உரிய நேரத்தில் செய்யும் கருணை உள்ளம் மிக்க, மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகளைத் தயார்படுத்த வேண்டியது நாமே! நம் பொறுப்பே!! அவற்றைச் செவ்வனே செய்ய திட்டம் வகுத்துக் கொள்ளுதல்.
6. இத்தகைய இமாலயப் பணியில் சக ஆசிரியர்களை உரிய வகையில் தூண்டி, ஆர்வத்தோடு ஈடுபடவும், ஒத்துழைப்பு நல்கிடவும் அவர்களையும் இணைத்துக் கொள்ளுதல்.
7. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களையும், வகுப்பாசிரியர் பொறுப்பையும் செவ்வனே செய்ய திட்டம் வகுத்துக் கொள்ளுதல்.
8. முகமறியா நம் கடின உழைப்பால் ஈட்டித் தந்த வெற்றியை பலர் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், வருத்தம் மிகப்படாமல், அடுத்த வெற்றிக்கு அடித்தமிட்டுக் கொண்டிருக்கும் “என் கடன் பணி செய்து கிடப்பதே!” என உழைத்துக் கொண்டிருக்கும் சக ஆசிரியர்களை மனதாரப் பாராட்டுதல்.
9. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்குத் தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான படிவங்கள் மற்றும் பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல்.
10. தமக்கு வழங்கப்பட்ட கால அட்டவணை அதிருப்தி இருந்தாலும், மாணவ, மாணவியர் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்றுக்கொள்ளுதல்.
11. மாணவ, மாணவியர் நலனைக் கருத்தில் கொண்டும், மற்றதைப் புறந்தள்ளி தம் பணியில் வெற்றிநடை போடத் தயாராகிக் கொள்ளுதல்.
12. வகுப்பறையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில், நம் பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டுதல்.
13. வகுப்பின் வருகைப் பதிவேட்டில், இனவாரியாக மாணவ, மாணவியர் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொள்ளுதல்.
14. மாற்றுத்திறனாளிகள், தந்தையை இழந்தவர்கள், பெற்றொரை இழந்தவர்கள்,… போன்றவர்களின் பட்டியலைத் தயாரித்தல்.
15. சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசனை செய்து, இவ்வாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு உயர என்ன செய்யலாம் என திட்டம் தீட்டிக் கொள்ளுதல்.
16. சாரண இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் இயக்கம், . . . போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு செவ்வனே செயல்படுதல்.
17. பள்ளி விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள், பாட இணைச் செயல்பாடுகள், விளையாட்டு விழாக்கள், ஆண்டு விழா, அறிவியல் கண்காட்சி, பள்ளி அளவிலான போட்டிகள், . . . போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, வெற்றிகரமாக நடத்த திட்டம் தீட்டிக்கொள்ளுதல்.
18. மாணவ, மாணவிகளின் பிறந்த நாள், பள்ளியில் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மத நல்லிணக்க நாள், . . . போன்ற முக்கிய நாட்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, அவற்றைக் கொண்டாட வழிகாட்ட, திட்டம் தீட்டிக்கொள்ளுதல்.
19. நீங்கள் விடுப்பில் செல்ல உள்ளதை, சக ஆசிரியர்களுக்கு தெரிவித்து, மாணவ, மாணவிகளை வேலை வாங்க அல்லது கற்பிக்க திட்டம் வகுத்துக் கொள்ள உதவிடுதல்.
20. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ, மாணவிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவரை நியமிக்கச் செய்து, பட்டியலிடுக் கொள்ளுங்கள். CCE செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.
21. மாணவ, மாணவிகளின் குழுக்களுக்கு அழகான பெயர் சூட்டி பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுதல்.
22. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ, மாணவிகளை தமிழ், ஆங்கிலம் பார்த்து படிக்கவும், வேகமாக வாசிக்கவும், மௌனமாக வாசிக்கவும் பயிற்சி அளிக்க நன்கு திட்டமிட்டுக் கொள்ளுதல். மாணவர் வாசிக்கத் தொடங்கிவிட்டால் கல்வி கற்பது எளிமையாகிவிடும்.
23. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள, மெல்ல கற்கும் மாணவர்கள், தெளிவாகப் படிக்கத் தெரியாதவர்கள் பட்டியலையும் தயார் செய்தல்.
24. அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளை, மீத்திறன் பெற்றோர், ஓரளவு கவனம் செலுத்த வேண்டியவர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள், 100 க்கு 100 எடுக்கத் திறமை பெற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்கள் என அவர்களைப் பிரித்து, அவர்களுக்குத் தக்கவாறு கல்வி கற்பிக்கவும், பயிற்சி வழங்கவும் முன்னேற்பாடு செய்து கொள்ளுதல்.
25. பாடவாரியான மதிப்பெண் பட்டியலும், தொகுப்பு மதிப்பெண் பட்டியலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாணவர் தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையயும் தலைமையாசிரியரிடமிருந்து பெறுதல்.
26. மாணவ, மாணவிகளை கூர்ந்து கவனித்து, அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க ஆலோசனை வழங்குதல்.
27. சென்ற வருடம் நடந்த சுகமான மற்றும் கசப்பான நிகழ்வுகளையும் மீண்டும் அசைபோட்டு நல்லனவற்றை ஏற்றுக்கொள்ளுதல். அல்லனவற்றைத் தள்ளுதல்.
28. சக பணியாளர்களின் பிறந்த நாள், மணநாள் ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாட்களில் அவர்களை வாழ்த்த மறக்காதீர்கள்.
29. சக ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் மனம் விட்டுப் பேசி பள்ளிச் சூழலை கலகலப்பாக்கிக் கொண்டால், எல்லா பணியும், முழுமையாகவும், நிறைவாகவும் வெற்றியடையும்.
30. சமுதாய அவலங்களைச் சீர்செய்யவும், சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவும், மனிதாபிமான சமுதாயம் மலரச்செய்யவும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டிய செயலை நாமே முன்னின்று செயல்படுத்துவோம். வாருங்கள்! வெற்றி நமதே!! வாழ்க ஆசிரியரினம்!!!

Listed By Mr. S. Ravikumar,
B.T. Asst., GHS., Arangaldurgam, Ph: 9994453649

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!

1. அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
2. ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்புகளின் எண்ணிக்கையை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
3. ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து, அவர்களுக்கு பாடங்களையும், வகுப்பாசிரியர் பொறுப்பையும் ஒதுக்கீடு செய்து கால அட்டவணை தயார் செய்துக்கொள்ளுங்கள்.
4. ஆசிரியர் இல்லாத பாடங்களை நடத்த கலை / ஓவிய / நெசவு / இடைநிலை / உடற்கல்வி ஆசிரியர்களின் ஒத்துழைப்பை நாடுங்கள்.
5. ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளுங்கள்.
6. தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பை, ஆர்வமுள்ள, ஒரு சில ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்.
7. தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Bridge Course நடத்த திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
8. முதல் நாள் இறைவணக்கக் கூட்டத்தில், சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டுங்கள்.
9. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கும், பாட ஆசிரியர்களுக்கும், வகுப்பாசிரியர்களுக்கும் வழங்கத் தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான படிவங்கள் மற்றும் பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
10. வகுப்பு வாரியாக, இனவாரியாக மாணவ, மாணவியர் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
11. சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை, வகுப்பு வாரியாக, இனவாரியாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
12. மாற்றுத்திறனாளிகள், தந்தையை இழந்தவர்கள், பெற்றொரை இழந்தவர்கள், . . . போன்றவர்களின் வகுப்புவாரியான பட்டியல் தயாரிக்க ஆவன செய்யுங்கள்.
13. தேவையான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பஸ் பாஸ் பெற்றுத் தர ஆவன செய்யுங்கள்.
14. ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெற்று வழங்கவும், வங்கிக்கணக்குத் துவங்கவும் தேவையானவற்றைப் (புகைப்படம், குடும்ப அட்டை ஒளிநகல், விண்ணப்பம் …) பெற திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
15. அரசிடமிருந்து மாணவ, மாணவிகளுக்கு இன்னும் பிற நல திட்டங்களைப் பெற்றுத் தரத் தேவையானதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
16. சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசனை செய்து, இவ்வாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு உயர என்ன செய்யலாம் என திட்டம் தீட்டிக் கொள்ளுங்கள்.
17. சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட மற்றும் நம் பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டினையும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் பெயர்களையும் அறிவிப்புப் பலகையில் எழுதி வையுங்கள்.
18. ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஊரில் உள்ள முக்கியமானவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர்களையும், நல் உள்ளங்களையும் பாராட்டி, பரிசு வழங்குங்கள்; வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
19. பள்ளி வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கும் நல் உள்ளம், தொண்டுள்ளம் கொண்டவர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
20. பள்ளி விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள், பாட இணைச் செயல்பாடுகள், சாரண இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் இயக்கம், . . . போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
21. பள்ளியின் அடிப்படை விவரங்களைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
22. ஆசிரியர்களின் ஆண்டு ஊதிய உயர்வு நாள், சரண்விடுப்பு வழங்கிய நாள், பொது வருங்கால வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகை வழங்கிய நாள், … ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
23. பணியாளர்களின் பிறந்த நாள், மணநாள் ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாட்களில் அவர்களை வாழ்த்த மறக்காதீர்கள்.
24. பள்ளியில் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மத நல்லிணக்க நாள், . . . போன்ற முக்கிய நாட்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றைக் கொண்டாட திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
25. மூன்று உள்ளூர் விடுமுறை நாட்களை எப்பொழுது விட வேண்டியிருக்கும் என்பது குறித்து திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்.
26. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ, மாணவிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவரை நியமிக்கச் செய்து, பட்டியலிட வகுப்பாசிரியரைக் கேட்டுக்கொள்ளுங்கள். வகுப்பு வாரியாக அப்பட்டியல்களைப் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
27. சிறிது கால இடைவெளிக்குப் பின், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள, மெல்ல கற்கும் மாணவ, மாணவிகள், தெளிவாகப் படிக்கத் தெரியாத மாணவ, மாணவிகள் பட்டியலையும் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
28. ஆசிரியர்களுக்கு வழங்க தொகுப்பு மதிப்பெண் பட்டியலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாணவர் தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையும் தயார் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
29. வருங்கால சமுதாயம் நல்சிந்தனையோடும், ஒழுக்கத்தோடும், பொதுநல நோக்கோடும் செயல்பட மாணவ, மாணவிகளுக்குத் தேவையானவற்றை நல்கிடவும், அறிவுறுத்திக் கூறவும், நல்வழி காட்டிடவும், அல்வழி போகாதிருக்க ஆவனச் செய்யவும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கலந்தாலோசித்து நன்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வருங்கால வலிமையான, சிந்தனை வளமிக்க, மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நாமே! நம் பொறுப்பே!!
30. சமுதாயச் சீர்கேடுகளைக் களைய வேண்டிய செயலை நாமே முன்னின்று செயல்படுத்துவோம்!!!

Posted in EDUCATION - கல்வி | பின்னூட்டமொன்றை இடுக

“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள்

“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு – சிறப்பு கட்டுரை

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆசிரிய சமுதாயத்திற்கே இழுக்கைத் தேடித்தருபவர்கள். இதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. பள்ளியில் பயில வரும் குழந்தைகள் பெற்றோர்க்கு அடுத்து நமக்கு பாதுகாப்பாக ஆசிரியர் இருப்பர் என முழுவதுமாக நம்புகிறது. அந்த நம்பிக்கையை ஊட்டியதே ஆசிரியர் சமுதாயம் தான். அந்த நம்பிக்கையை பாழ்ப்படுத்தி மாணவிகளை ஆண் ஆசிரியர்களும், மாணவர்களைப் பெண் ஆசிரியர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சிலர் உள்ளது ஆசிரிய சமுதாயத்திற்கே களங்கம். இது போல் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நடப்பதை கண்டிப்பாக தடுக்கத்தான் வேண்டும்.

மற்றத்துறைகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பணியாளரின் செயல் சம்பவமாகவும், கல்வித் துறைகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பணியாளரின் செயல் செய்தியாகிறது. ஆசிரியர் என்பவர் ஆசுகளை (குற்றங் குறைகளை) நீக்குபவர்; நல்வழிப்படுத்துபவர்; சிறந்த முன் மாதிரியாக விளங்குபவர். வளரும் ஒரு மாணவனோ, மாணவியோ சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவரும் அவரே! என் செய்வது வெகு சிலர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் முன் மாதிரியாகிவிடுகின்றனர்.

அதனைத் தடுக்க உள்ள சிலபல வழிகளில் உடனடி தீர்வாக நம் தமிழ்நாடு அரசு மேற்கூறியவாறு அதிரடியாக அறிவித்துள்ளது. பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களும், அரசு ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும், அரசு இரு பாலர் பள்ளிகளில் ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களும் பணிபுரிவர் என்ற நிலை (முடிவு) வரவேற்கக்கூடியதே! முழுமையாக இந்நிலையை எட்ட சில காலம் ஆகும்.

மகளிர் காவல் நிலையங்களைப் போல், மாணவிகளுக்காக, பெண் ஆசிரியர்களைக் கொண்ட, பெண் தலைமை ஆசிரியரால் நிர்வகிக்கப்பட உள்ளன. இதன் சாதக, பாதக விஷயங்களை ஆராய்வோம்.

சாதகங்கள்

மாணவிகள் தங்கள் பிரச்சனைகளை, தேவைகளை, இயலாமையை பெண் ஆசிரியர்களிடம் எளிதாக அணுகி, சொல்ல முடியும்.

ஒரு பெண், தன் குழந்தையின் கல்வி கற்றலின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க பெண் ஆசிரியர்களை அணுகுவது எளிது.

சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான உள்ள தொல்லைகள் குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூற முடியும்.

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட உள்ள சூழ்நிலைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

ஆணைச் சார்ந்து வாழும்போதும், ஆணைச் சார்ந்து வாழ முடியாதபோதும் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை மாணவிகளுக்குப் புரியவைக்க முடியும்.

குமரப்பருவதில் ஏற்படும், ஏற்படவுள்ள மாற்றங்களை மிக வெளிப்படையாக மாணவிகளிடம் கலந்தாலோசிக்க முடியும்.

எல்லா வேலைகளையும் தாமே செய்வதாலும், தன் தேவையைத் தானே நிறைவேற்றிக்கொள்வதாலும் தன்னம்பிக்கை வளரும்.

அவ்வாறான தன்னம்பிக்கை உள்ள பெண் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியர்கள் சிறந்த முன் மாதிரியாக விளங்குவர்.

ஒரு ஆணோடு பேச வேண்டிய அல்லது இருக்க வேண்டிய சூழ்நிலையில் என்னென்ன மாதிரியான சங்கடங்கள் வரும் என்பதையும், அதை எவ்வாறு எதிர்கொள்வது? எவ்வாறு தவிர்ப்பது? எப்படி தப்பிக்கலாம்? என்பதை வெளிப்படையாக, வெற்றிகரமாக மாணவிகளிடம் எடுத்துரைக்க இயலும்.

பெண் பருவமடைதல் என்பது வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான் என்பதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும், அதன் பின் வரும் தொடர் நிகழ்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதையும் மாணவிகளிடம் இயல்பாகவும், அக்கறையுடனும், எளிமையாகவும் எடுத்துரைக்க இயலும்.

ஆண்களின் Good touch, Bad touch குறித்த விழிப்புணர்வை இயல்பாகவும், அக்கறையுடனும், எளிமையாகவும் ஏற்படுத்த முடியும்.

பள்ளியிலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து பள்ளிக்கும், பிற இடங்களுக்கும் செல்லும் போது பயப்படாமல், தைரியமாக இருக்கவும், எத்தகைய சூழலிலும் அதைரியப்படாமல், எந்தவொரு பாதிப்பும், இழப்பும் இன்றி விடுபட்டு வருவது என்பதை நுணுக்கமாக கற்றுத்தர முடியும்.

பாதகங்கள்

விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வரைபடநூல்கள், புத்தகப்பைகள், காலணிகள், வரைபடப்பெட்டிகள், சைக்கிள்கள், மடிக்கணினிகள், . . . . . போன்றவற்றைப் பள்ளிக்கு வாங்கி வருவது சிரமம்.

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் உடனடியாக சில தகவல்களை, கடிதங்களை நேரில் அளிப்பதில் ஏற்படும் சில அசௌகரியங்கள்.

சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று வாங்கி வருவதில் ஏற்படும் சிரமம்.

பள்ளி மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலதிட்டங்களைப் பெற, அவர்களுக்கு வங்கிக்கணக்கு துவக்குவதில் ஏற்படும் சிரமம்.

எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. மூலம் பள்ளிககு வழங்கப்படும் கட்டிடங்களைக் கட்டுவதிலும், கட்டும்போதும் ஏற்படும் சிரமங்கள்.

பெற்றோர், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், PTA, SSA, SMDC, SMC, etc. போன்றவற்றின் பொறுப்பாளர்கள் போன்றோரால் ஏற்படும் கஷ்டங்கள்.

பொது மக்களால், பள்ளிக்கு வரும் சில சிக்கல்களைத் தீர்ப்பதில் நேரும் சங்கடங்கள்.

கோபத்துடனும், தன்னிலை மறந்தும், பள்ளிக்கு வரும் சில பெற்றோர்களைச் சமாளிப்பதில் ஏற்படும் சிக்கல்.

பள்ளியில் தகராறு செய்யும் நோக்கத்துடன் வருபவர்களை அணுகுவதில் ஏற்படும் சிரமம்.

பெண் தானே! என்ற எண்ணத்தோடு வரும் பொது மக்களால் ஏற்படும் தகிடுதத்தங்கள்.

பணி செய்வதில் சுணக்கம் காட்டுபவர்களை தட்டிக் கேட்க காட்டும் தயக்கம்.

மேற்கூறிய சிரமங்களையும், சங்கடங்களையும், இயலாமைகளையும், கஷ்டங்களையும், தயக்கங்களையும், அசௌகரியங்களையும், துன்பங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதிக்கும் பெண் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியர்கள் சிறந்த முன் மாதிரியாக விளங்குவர். அவர்களிடம் பயின்ற மாணவிகள் எவ்வித சிரமமுமின்றி வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவர்.

முதலில் கூறப்பட்ட நிறைகளை தம் பணிக்காலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய, காட்டும் பல ஆண் தலைமை ஆசிரியர் மற்றும் ஆண் ஆசிரியர்கள் பலர் நம்மில் உண்டு. எனினும், இப்போதைக்கு சிறந்த முன் மாதிரியாக விளங்க மகளிரை மட்டுமே கொண்ட பள்ளிகளை வரவேற்போம்!

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! – சிறப்பு கட்டுரை

கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை – வாசகர்களின் மறு பார்வைக்காக.

(இக்கட்டுரை எந்த காரணம் கொண்டும் தனியார் பள்ளியை குறை கூறுவதாக அமையாமல், அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளும், அவர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் நிறை குறைகளை உலகிற்கு படம் பிடித்து காட்டும் வகையில் மட்டுமே அமைந்து உள்ளது.)

அரசு பள்ளி மாணவர்களின் சூழ்நிலை:

மாணவ, மாணவிகள் படிப்பதற்கு எந்நேரமும் உகந்ததாக இல்லாத சூழ்நிலை
அரசுப்பள்ளியையும், ஆசிரியர்களையும் மட்டுமே முழுமையாக நம்பும் பெற்றோர்
தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கி தர இயலாத ஏழ்மையான பெற்றோர்.
கல்வியறிவு இல்லாத பெற்றோர்.
ஒரு வகுப்பில் உள்ள அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகள் (ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக).
பல ஆண்டுகளாக ஆசிரியர் இன்றி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்.
பள்ளியில் சேர எப்பொழுது வந்தாலும், அவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்களை வரவேற்று சேர்த்துக் கொண்டு, எவ்வளவு குறுகிய காலமானாலும், அவர்களுக்கு தேவையானதைக் கற்பித்து, அவர்களையும் தேர்ச்சி பெற உழைக்கும் ஆசிரியர்கள்.
கற்றலில் பின் தங்கியவர்களை அதிகமாகக் கொண்ட பள்ளிகள்.
கற்றலில் பின் தங்கியவர்களையும், பள்ளியை விட்டு இடையில் நின்றவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுபவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
தவறு செய்யும் மாணவ, மாணவிகளையோ, பள்ளிக்கு அடிக்கடி வராத மாணவ, மாணவிகளையோ, ஒழுங்காகப் படிக்காத மாணவ, மாணவிகளையோ எதுவும் கண்டித்து கேட்கக் கூட உரிமை இல்லாதவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
அத்தகைய மாணவ, மாணவிகளைப் பக்குவமாக அரவணைத்து, கடினமான சூழ்நிலையையும் எளிமையாகக் கையாண்டு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைக்கும் ஆசிரியர்கள்.
குறைவான தேர்ச்சி.
பெரும்பாலான மாணவ, மாணவிகளை, அவர்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரிகளாக்க அசராது பாடுபடும் ஆசிரியர்கள்.
மாணவ, மாணவியர் வீட்டுக்கு வந்ததும், பள்ளியில் படித்தது போதும், இருக்கிற வேலையைப் பார் எனக் கூறும் பெற்றோர்.
தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் திருமண உதவி திட்டத்தில் பயன்பெற அவர்களைத் தயார்படுத்துதல்.
மனப்பாடம் செய்து படிக்காமல், புரிந்துகொண்டு படிக்கும் முறையில் கல்வி கற்பித்தல்.
எல்லா வகையிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறவும், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படைகளை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த வகுப்புப் பாடங்களை, அந்தந்த வருடத்தில் நடத்துதல்.
மாணவ, மாணவிகள் நலனுக்காக, ஏற்கெனவே உள்ள பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர் இல்லாத பாடத்தையும், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பிக்கும் தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும், வழிகாட்டுதல்கள் வழங்கும் தன்னலமற்ற ஆசிரியர்கள்

அரசு பள்ளி மாணவர்களின் வறுமை நிலை :-
படிக்க ஆசை இருந்தும், பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென்றவுடன், தம்பி தங்கைகளுக்கு இரண்டாவது தாயாகவும், சமையல் உதவியாளராகவும், பெரும்பான்மை கிராம வீடுகளில் சமையலராகவும் அவதாரமெடுக்கும் மாணவிகள்; சம்பளமில்லா பணியாளாராகவும், பொருளீட்டும் வேலைக்காரராகவும் மாறும் மாணவர்கள், படிப்பதற்கு உகந்ததாக இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பணி செய்ய வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மாணவர்களின் பாழாய் போன கிரிக்கெட் ஆடும் ஆசைக்கு பலியாகும் மாணவர்கள், குடும்ப வருவாயைப் பெருக்க ஓரளவு வேலை செய்யும் பெண்கள் களைப்பை (!!!!!!!!!!!!!!!!!) மறைக்க தொ(ல்)லைகாட்சி பார்க்கும் ஆசைக்கு பலியாகும் மாணவிகள்.

சுயநல ஆசை மற்றும் பிரச்சனைகளால் பிரிந்த பெற்றோரின் அக்கறையின்மை காரணமாக, தாத்தா, பாட்டி, உறவினர் வீட்டிலேயோ, அல்லது பிரிந்த பெற்றோரின் ஊர்களுக்கு மாறி, மாறி படிக்க வேண்டிய சூழலில் உள்ள மாணவ, மாணவிகள்.

செய்யாத வீட்டுப்பாடங்கள், குறு, சிறு தேர்வுகளுக்கு படிக்காமை, 2 அல்லது 3 கி.மீ. நடந்து சென்று பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்ற நினைப்பு தரும் களைப்பு, காலையில் வீட்டில் / நிலத்தில் செய்த வேலை தந்த அசதி, வீட்டில் நேற்று நடந்த பெற்றோரின் சண்டை தரும் மன உளைச்சல், ஏழ்மை தரும் அயர்ச்சி, தொலைக்காட்சியில் பார்த்த, கனவிலும் எட்டாத செல்வச் செழிப்பு, அத்தகைய உயர்வுக்கு நம்மால் செல்ல முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை போன்ற பலவித மனப்போராட்டங்களுக்கிடையே பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையானவற்றை, அவர்கள் விரும்பும் வகையில், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பித்து, அவர்களையும் பள்ளி இறுதித்தேர்வுகளில் வெற்றியடையச் செய்யும் பள்ளிகளையும், ஆசிரியர்களையும், வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

ஒரு சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால், ஒட்டு மொத்த அரசுப் பள்ளிகளை செய்தித்தாள்களின் விலாசல்களாலும், கல்வியாளர்களாக காட்டிக்கொள்ள விரும்பும் சிலரின் விமர்சனங்களாலும், அடிப்படை சூழ்நிலைகளைப் புரிந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல் செய்யும் சிலரின் வாதங்களாலும், எதையும் எளிதில் நம்பிவிடும் பொதுமக்களின் தூற்றுதல்களாலும் எல்லா வகையிலும், எல்லோராலும் புண்படுத்தப்பட்டும், கையறு நிலையிலும், எதைப் பற்றியும் கவலைப் படாமல், ”போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கே!” என முகம் தெரியாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

ஏழை மாணவ, மாணவிகளுக்கு, பிரதிபலன் எதிர்பாராமல் பொருளுதவி நல்கியும், ஊக்குவித்தும், நல்வழி காட்டி, அவர்களின் முன்னேற்றத்திற்காகவே – மெழுகுவர்த்தி போல் – அயராது பாடுபடும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

வசதியின்றி, வாய்ப்பின்றி, வழி தெரியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையானதைக் கொடுத்து அவர்களையும் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

போக்குவரத்து இல்லாத கிராமத்திலுள்ள பள்ளிகளில் பணி புரிந்து, நகர்ப்புறம் பற்றி அறியாத மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களையும் வாழ்வில் முன்னேற்றி, வெற்றி பெற வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

சுற்றுச்சுவர் இல்லாத, கேட் போடப்படாத, கேட் இருந்தாலும் எப்போதுமே திறந்திருக்கும் பள்ளிகளில், படிப்பறிவு இல்லாத பெற்றோரின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, நவீன இந்தியாவை, வலிமையான இந்தியாவை, பெருமைமிகு இந்தியாவை உருவாக்கக் காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கல்வியையும், ஊக்கத்தையும், வழிகாட்டுதல்களையும், அன்பையும், அரவணைப்பையும் வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.

இவ்வாறு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் கூட முழு நேர சிறப்பு வகுப்பு நடத்தி பல அரசு பள்ளி ஆசிரியர்கள் தன்னலமின்றி உழைக்கிறார்கள்.

திரவ பொருளான பாலையும், திட பொருளான பழத்தையும் எவ்வாறு ஒரு தராசில் வைத்து அளவிட முடியாதோ அதே போன்று இரு வேறு சூழ்நிலைகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒரு தராசில் வைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். இருவருமே அவரவர் மாணவர் சூழ்நிலைக்கேற்ப கற்பித்தல் எனும் உன்னத சேவையில் ஈடுபடுகிறோம்.

Posted in பகுக்கப்படாதது | 1 பின்னூட்டம்

Tenth Study Materials

இணைப்பு | Posted on by | பின்னூட்டமொன்றை இடுக

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 5

இன்றைய நல்ல மாணவன் நாளைய சிறந்த குடிமகன். இன்றைய மாணவன் நாளைய வலிமையான, நவீன இந்தியாவின் தூணாக விளங்கக் கூடியவன். கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆசிரியர்களும், அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.

பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, கற்பிக்கும் பொருளில் போதுமான அளவில் புலமை பெற்ற, அன்றாட நாட்டு மற்றும் உலக நடப்புகளை அறியும் ஆர்வம் மிக்க, பல்லூடக அறிவு பெற்ற, நல்ல சமூகத்தை உருவாக்கும் சிந்தனை மிகுந்த, மாணவ, மாணவியர்களிடையே ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பக்குவமாக தீர்க்கும் வழி வகை தெரிந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

மேலும் ஆசிரியர்கள் சமூக அக்கறை, பொறுமை, கடமை. கண்ணியம், கட்டுப்பாடு, பொதுநலம், நாட்டுப்பற்று மற்றும் மாணவர்களின்  சூழ்நிலை அறிந்து அவர்களை அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறச்செய்தல் போன்றவற்றில் திறன் பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும், மாணவர் திறமையை அறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வல்லமை பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்பு: ஆசிரியர்களை உருவாக்கும் B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்புப் பயிற்சியை நான்கு ஆண்டு படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். B.Ed. (இளங்கலை) பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் கணிப்பொறியைப் பயன்படுத்த வல்லவராக உருவாக்கப்பட வேண்டும்.

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக மொழியாசிரியர் உருவாக்கப்பட வேண்டும். கணக்கையும், கணக்குப்பதிவியலையும் கற்பிக்க வல்லவராக கணக்கு ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். தாவரவியலையும், விலங்கியலையும், வேதியியலையும், இயற்பியலையும் கற்பிக்க வல்லவராக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் ஆகியவற்றைக்  கற்பிக்க வல்லவராக சமூக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டுகள் கற்பிக்க வல்லவராகவும்,  அவசர காலத்தில் முதலுதவி வழங்க போதுமான அளவிற்கு மருத்துவ அறிவு பெற்றவராகவும், மக்கள் தொடர்பு குறித்த ஆழ்ந்த புலமை பெற்றவராகவும் உடற்பயிற்சி ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும்.

 

கணிப்பொறி ஆசிரியர்: எதிர்கால இந்தியாவை உருவாக்கவல்ல இன்றைய மாணவர்கள், கணிப்பொறியை இயக்கும் வல்லமையைப் பெற்றிட, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணிப்பொறிகளை இயக்கவும், கணிப்பொறிகளை இயக்க பயிற்சி அளிக்கவும், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் கணிப்பொறி ஆசிரியரை நியமித்திட வேண்டும்.  ஓவிய மற்றும் கலை ஆசிரியர்களை  கணிப்பொறி ஆசிரியராக்கும் வண்ணம் அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிப்பொறி இயக்கும் வல்லமையைப் பெற்றிட்ட மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வி கற்க வரும்போது அவர்களுக்கு வழங்கப்படும் மடிக் கணிப்பொறியை எளிமையாகக் கையாள்வர்.

 

நீதி போதனையைக்  கற்பிக்கவும், நூலகத்தினை கவனிக்கவும் ஒரு ஆசிரியர்: உலக அளவில் பல முன்னேறிய நாடுகள் வியந்து போற்றிப் புகழ்ந்து, பின்பற்ற ஆசைப்படும் பண்பாடு நம் தமிழர் பண்பாடு. எல்லா நாகரீகங்களுக்கும்  முன்னோடியாகத் திகழ்வது நம் தமிழர் பண்பாடு. இன்றைய தொலைகாட்சி, தரமற்ற சில திரைப் படங்கள், செல்போன் மற்றும் இணையம் மூலம் மாணவ, மாணவியர் ஈர்க்கப்பட்டு நம் பண்பாட்டிலிருந்து மாறிச் செல்லும் போக்கு இப்பொழுது சிறிது, சிறிதாக ஆனால் மிக விரைவாக நிகழ்ந்து கொண்டிருகிறது. இதைச் சரியாக்க பள்ளிகளில் நீதிபோதனை, அறக்கருத்துக்கள், நல்வழி காட்டி சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் நூலகத்தையும், அதை நிர்வகிக்க ஒரு நூலகர் பணியிடத்தையும் வழங்க வேண்டும். நிதி வசதி இடம் தராது எனில் பள்ளியிலுள்ள சத்துணவு அமைப்பாளரை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

 

ஒளி, ஒலிக் காட்சி அறை: தமிழ் நாட்டில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த ஒவ்வொரு பள்ளியிலும் அதனுடன் இணைந்த ஒளிப்பட வீழ்த்தியுடன் கூடிய [Computer, Overhead Projector, Screen, DVD Players, and Educational DVDs] கூடிய அதிநவீன ஒளி, ஒலிக் காட்சி அறை [AUDIO VISUAL ROOM] அமைத்திட வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடு அதிநவீனமடையச் செய்ய வேண்டும்.

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 4

பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.

அவை கீழ்கண்டவாறு பல வகையான பள்ளிகளாக உள்ளன.

 1. உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்      [State Board Schools]
 2. மெட்ரிக் பள்ளிகள்           [Matriculation Schools]
 3. ஓரியண்டல் பள்ளிகள்    [Oriental Schools]
 4. ஆங்கிலோ இந்திய பள்ளிகள்     [Angilo-Indian Schools]

அவை அரசின் பல துறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

 1. பள்ளிக் கல்வித்துறை [Elementary, Middle, High, Higher Secondary, Matriculation, Oriental, Angilo-Indian Schools]
 2. நகராட்சித்துறை [Municpal Schools]
 3. மாநகராட்சித்துறை [Corporation Schools]
 4. ஊராட்சித்துறை [Panchayat Union Schools]
 5. வனத்துறை [Forest Schools]
 6. ஆதிதிராவிட நலத்துறை [Adi Dravida Welfare Schools] etc.

மாநில அளவில் பல துறைகளால் நிர்வகிக்கப்படும் இப் பள்ளிகளில் சிலவகைப் பள்ளிகள் கட்டமைப்பு, கல்வி கற்பித்தல், கல்வி கற்றல், நிர்வகித்தல் மற்றும் பல வகையில் நல்ல தரத்துடன் இருக்கின்றன. பல பள்ளிகள் அதற்கு மாறாக இருக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை மூலம் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும்.

அவற்றை

 1. 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட, இடைநிலை ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் தொடக்கப் பள்ளிகள்
 2. 2.         6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட, பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகள்
 3. 11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் மேல்நிலைப் பள்ளிகள்

என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director – Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3

கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்” என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.

நம்மை விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.

பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஆங்கிலம் எவ்வாறு கற்பிப்பது எனத் தெரியாமலேயே ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், இளங்கலை பட்டபடிப்பில், வரலாறு படிக்காமலேயே வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள், புவியியல் படிக்காமலேயே புவியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்பியல் படிக்காமலேயே இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், வேதியியல் படிக்காமலேயே வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயிரியல் படிக்காமலேயே உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்ததுதான் நமது பள்ளிகள். அதையும் மீறி சாதிக்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர்.

போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில், அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டிய இன்றைய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் படித்த ஆசிரியர்கள் மற்றவற்றை வெற்றிகரமாக கற்பித்தல் என்பது எந்த அளவு நடைமுறை சாத்தியமானது அறிந்துகொள்ளக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய, நிரூக்கத் தேவையில்லாத உண்மை.

எனவே, இடைநிலை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனும் மூன்று வகையான ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “பட்டையம்” [D. T. Ed.].
நான்கு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “இளங்கலைப் பட்டம்” [B. Ed.].
மேலும் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “முதுகலை பட்டம்” [M. Ed.].

பட்டையப் பயிற்சியில், 1 முதல் 5 வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

இளங்கலைப் பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

முதுகலை பட்டப் பயிற்சியில், 11 முதல் 12 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு அல்லது சமூக அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு, etc. ஒரு பாடம், அதைக் கற்பிக்கும் முறைகளும், 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 2

மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக உயர்நிலைப் பள்ளியாகவும், 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு பதில் புதியதாக உயர்நிலைப் பள்ளியே துவக்கப்பட வேண்டும். RMSA திட்டத்தின் மூலம் அல்லது NABARD வங்கி நிதி உதவி மூலம் ஒரே ஆண்டில் உயர்நிலைப் பள்ளியை முழு கட்டமைப்பு உடைய பள்ளியாக மாற்றியமைக்க முடியும்.

இவ்வாறே மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக மேல்நிலைப் பள்ளியாகவும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் கொண்ட உயர்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளியை பிரித்து அமைப்பது போல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மாற்றியமைக்க முடியும்.

ஒரே ஊரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளை மிக எளிதாக தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள உயர்நிலைப் பள்ளியாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள மேல்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்க முடியும்.

உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு பதில் புதியதாக மேல்நிலைப் பள்ளியே துவக்கப்பட வேண்டும். NABARD வங்கி நிதி உதவி மூலம் அல்லது பொதுமக்கள் பங்களிப்பு மூலம் ஒரே ஆண்டில் மேல்நிலைப் பள்ளியை முழு கட்டமைப்பு உடைய பள்ளியாக மாற்றியமைக்க முடியும்.

இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் ஐந்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை உயர்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ள வழிவகை செய்வதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பைப் பெற இயலும்.
அவ்வாறே இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் பத்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை மேல்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ள வழிவகை செய்வதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பைப் பெற இயலும்.

மிகச் சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே கொண்டதாக மாற்றியமைக்க முடியும்.

இலவச பஸ்பாஸ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்படாமலும், பொதுமக்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எந்தவொரு எதிர்ப்பு இன்றியும், முழு ஒத்துழைப்போடும்
மேற்கூறியவற்றை நடைமுறைப்படுத்த இயலும்.

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்ளாகவும் பதவி உயர்வு வழங்கலாம்.

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக