“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள்

“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு – சிறப்பு கட்டுரை

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆசிரிய சமுதாயத்திற்கே இழுக்கைத் தேடித்தருபவர்கள். இதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. பள்ளியில் பயில வரும் குழந்தைகள் பெற்றோர்க்கு அடுத்து நமக்கு பாதுகாப்பாக ஆசிரியர் இருப்பர் என முழுவதுமாக நம்புகிறது. அந்த நம்பிக்கையை ஊட்டியதே ஆசிரியர் சமுதாயம் தான். அந்த நம்பிக்கையை பாழ்ப்படுத்தி மாணவிகளை ஆண் ஆசிரியர்களும், மாணவர்களைப் பெண் ஆசிரியர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சிலர் உள்ளது ஆசிரிய சமுதாயத்திற்கே களங்கம். இது போல் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நடப்பதை கண்டிப்பாக தடுக்கத்தான் வேண்டும்.

மற்றத்துறைகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பணியாளரின் செயல் சம்பவமாகவும், கல்வித் துறைகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பணியாளரின் செயல் செய்தியாகிறது. ஆசிரியர் என்பவர் ஆசுகளை (குற்றங் குறைகளை) நீக்குபவர்; நல்வழிப்படுத்துபவர்; சிறந்த முன் மாதிரியாக விளங்குபவர். வளரும் ஒரு மாணவனோ, மாணவியோ சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவரும் அவரே! என் செய்வது வெகு சிலர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் முன் மாதிரியாகிவிடுகின்றனர்.

அதனைத் தடுக்க உள்ள சிலபல வழிகளில் உடனடி தீர்வாக நம் தமிழ்நாடு அரசு மேற்கூறியவாறு அதிரடியாக அறிவித்துள்ளது. பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களும், அரசு ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும், அரசு இரு பாலர் பள்ளிகளில் ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களும் பணிபுரிவர் என்ற நிலை (முடிவு) வரவேற்கக்கூடியதே! முழுமையாக இந்நிலையை எட்ட சில காலம் ஆகும்.

மகளிர் காவல் நிலையங்களைப் போல், மாணவிகளுக்காக, பெண் ஆசிரியர்களைக் கொண்ட, பெண் தலைமை ஆசிரியரால் நிர்வகிக்கப்பட உள்ளன. இதன் சாதக, பாதக விஷயங்களை ஆராய்வோம்.

சாதகங்கள்

மாணவிகள் தங்கள் பிரச்சனைகளை, தேவைகளை, இயலாமையை பெண் ஆசிரியர்களிடம் எளிதாக அணுகி, சொல்ல முடியும்.

ஒரு பெண், தன் குழந்தையின் கல்வி கற்றலின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க பெண் ஆசிரியர்களை அணுகுவது எளிது.

சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான உள்ள தொல்லைகள் குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூற முடியும்.

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட உள்ள சூழ்நிலைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

ஆணைச் சார்ந்து வாழும்போதும், ஆணைச் சார்ந்து வாழ முடியாதபோதும் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை மாணவிகளுக்குப் புரியவைக்க முடியும்.

குமரப்பருவதில் ஏற்படும், ஏற்படவுள்ள மாற்றங்களை மிக வெளிப்படையாக மாணவிகளிடம் கலந்தாலோசிக்க முடியும்.

எல்லா வேலைகளையும் தாமே செய்வதாலும், தன் தேவையைத் தானே நிறைவேற்றிக்கொள்வதாலும் தன்னம்பிக்கை வளரும்.

அவ்வாறான தன்னம்பிக்கை உள்ள பெண் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியர்கள் சிறந்த முன் மாதிரியாக விளங்குவர்.

ஒரு ஆணோடு பேச வேண்டிய அல்லது இருக்க வேண்டிய சூழ்நிலையில் என்னென்ன மாதிரியான சங்கடங்கள் வரும் என்பதையும், அதை எவ்வாறு எதிர்கொள்வது? எவ்வாறு தவிர்ப்பது? எப்படி தப்பிக்கலாம்? என்பதை வெளிப்படையாக, வெற்றிகரமாக மாணவிகளிடம் எடுத்துரைக்க இயலும்.

பெண் பருவமடைதல் என்பது வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான் என்பதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும், அதன் பின் வரும் தொடர் நிகழ்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதையும் மாணவிகளிடம் இயல்பாகவும், அக்கறையுடனும், எளிமையாகவும் எடுத்துரைக்க இயலும்.

ஆண்களின் Good touch, Bad touch குறித்த விழிப்புணர்வை இயல்பாகவும், அக்கறையுடனும், எளிமையாகவும் ஏற்படுத்த முடியும்.

பள்ளியிலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து பள்ளிக்கும், பிற இடங்களுக்கும் செல்லும் போது பயப்படாமல், தைரியமாக இருக்கவும், எத்தகைய சூழலிலும் அதைரியப்படாமல், எந்தவொரு பாதிப்பும், இழப்பும் இன்றி விடுபட்டு வருவது என்பதை நுணுக்கமாக கற்றுத்தர முடியும்.

பாதகங்கள்

விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வரைபடநூல்கள், புத்தகப்பைகள், காலணிகள், வரைபடப்பெட்டிகள், சைக்கிள்கள், மடிக்கணினிகள், . . . . . போன்றவற்றைப் பள்ளிக்கு வாங்கி வருவது சிரமம்.

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் உடனடியாக சில தகவல்களை, கடிதங்களை நேரில் அளிப்பதில் ஏற்படும் சில அசௌகரியங்கள்.

சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று வாங்கி வருவதில் ஏற்படும் சிரமம்.

பள்ளி மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலதிட்டங்களைப் பெற, அவர்களுக்கு வங்கிக்கணக்கு துவக்குவதில் ஏற்படும் சிரமம்.

எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. மூலம் பள்ளிககு வழங்கப்படும் கட்டிடங்களைக் கட்டுவதிலும், கட்டும்போதும் ஏற்படும் சிரமங்கள்.

பெற்றோர், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், PTA, SSA, SMDC, SMC, etc. போன்றவற்றின் பொறுப்பாளர்கள் போன்றோரால் ஏற்படும் கஷ்டங்கள்.

பொது மக்களால், பள்ளிக்கு வரும் சில சிக்கல்களைத் தீர்ப்பதில் நேரும் சங்கடங்கள்.

கோபத்துடனும், தன்னிலை மறந்தும், பள்ளிக்கு வரும் சில பெற்றோர்களைச் சமாளிப்பதில் ஏற்படும் சிக்கல்.

பள்ளியில் தகராறு செய்யும் நோக்கத்துடன் வருபவர்களை அணுகுவதில் ஏற்படும் சிரமம்.

பெண் தானே! என்ற எண்ணத்தோடு வரும் பொது மக்களால் ஏற்படும் தகிடுதத்தங்கள்.

பணி செய்வதில் சுணக்கம் காட்டுபவர்களை தட்டிக் கேட்க காட்டும் தயக்கம்.

மேற்கூறிய சிரமங்களையும், சங்கடங்களையும், இயலாமைகளையும், கஷ்டங்களையும், தயக்கங்களையும், அசௌகரியங்களையும், துன்பங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதிக்கும் பெண் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியர்கள் சிறந்த முன் மாதிரியாக விளங்குவர். அவர்களிடம் பயின்ற மாணவிகள் எவ்வித சிரமமுமின்றி வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவர்.

முதலில் கூறப்பட்ட நிறைகளை தம் பணிக்காலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய, காட்டும் பல ஆண் தலைமை ஆசிரியர் மற்றும் ஆண் ஆசிரியர்கள் பலர் நம்மில் உண்டு. எனினும், இப்போதைக்கு சிறந்த முன் மாதிரியாக விளங்க மகளிரை மட்டுமே கொண்ட பள்ளிகளை வரவேற்போம்!

Advertisements

About srk1963

HIGH SCHOOL TEACHER. I WANT SHARE MY THOUGHTS TO OTHERS.
This entry was posted in பகுக்கப்படாதது. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s