பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி

 

26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.

 

அரசாணை (நிலை) எண் 143, பள்ளிக்கல்வி (வி) துறை, நாள் 19.09.2011 இன் படி, 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

2013 – 2014 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

 

2014 – 2015 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தப்படுமா? செயல்படுத்தப்பட்டால் என்ன? செயல்படுத்தப்படாவிட்டால் என்ன? சாதக பாதகங்கள் என்ன? எவ்வாறு செயல் படுத்தலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் ஒரு முயற்சியே இது!

 

10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தினால் மாணவர்களின் தரம் பாதிக்கப்படும் (?) என ஒரு சாரார்; மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் போகும் என ஒரு சாரார்; மூன்று முறை அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிடலாம் என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிட்டு 11 ஆம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும், இது சாத்தியப்படுமா? என்பது குறித்த ஒட்டிய, எதிரான கருத்துக்களையும் அலசியதால் ஒரு சின்ன தெளிவு.

 

10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டையும் செயல்படுத்தலாம். மூன்று பருவங்களின் முடிவிலும் அரசு பொதுத்தேர்வு நடத்தலாம்.

 

வளரறித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் என்பதை அவ்வாறே நடைமுறைப்படுத்தலாம். அல்லது வளரறித் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என மாற்றியமைத்தும் நடைமுறைப்படுத்தலாம்.

 

முதலிரண்டு பருவங்களுக்கு பாடப்புத்தகங்களில், ஒவ்வொரு பாடத்தின்  இறுதியில் வினாக்கள் கொடுக்காமல் விட்டு விடலாம் அல்லது ஒரு மதிபெண் வினாக்கள் மட்டுமே கொடுக்கலாம். பாடப்பகுதி முழுமையிலும் ஒரு மதிபெண் வினாக்கள் இடம்பெறும் வகையில் முதலிரண்டு பருவங்களுக்கு ஒரு மதிப்பெண்களுக்கான தேர்வாக மட்டுமே நடத்தலாம். அதற்கு, இப்போதைய போட்டித்தேர்வுகளைப் போலவே [TNPSC தேர்வுகள், TET, etc] OMR coding sheet இல் விடையளிக்கச் செய்யலாம். இதைத் திருத்த ஆசிரியர்கள் அவசியமில்லை. விடைத்தாள் திருத்த அதிகம் செலவாகாது. மேலும் எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மாணவர்களின் நுண்ணறிவு வளர்ச்சியுறும். முழுமையாக, ஆழமாக பாடத்தை மாணவர்கள் கற்று, அலசி ஆராயும் திறனையும், படித்ததை சூழ்நிலைக்குப் பயன்படுத்தும் ஆற்றலையும், ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியையும் பெறுவர்.

 

2 அல்லது 2½ மணி நேரத்தில் எழுதக்கூடிய வகையில் 60 அல்லது 120 வினாக்கள் கொண்டதாக தேர்வை வடிவமைக்கலாம். இத்தகையத் தேர்வு பலவுள் வினா, சரியா? தவறா? எனக் காணல், தவறானவற்றைக் காணல், சரியானதைக் காணல், கொடுக்கப்பட்ட காலியிடங்களுக்கு சரியான விடையைத் தேர்வு செய்தல், படத்தில் குறித்துள்ள பாகத்தை கொடுக்கப்பட்ட விடைகளிலிருந்து  தேர்வு செய்தல், பொருத்துதல், கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்வு செய்தல் போன்ற பலவகை வினாக்கள் கொண்டதாக அமைக்கலாம்.

 

இத்தகையத் தேர்வுகள் மாணவரின் படிக்கும் ஆற்றலையும், படித்த பகுதியிலுள்ளதை உட்கிரகிக்கும் வேகத்தையும், அதைப் பயன்படுத்தும் லாவகத்தையும் மதிப்பிடுவதாக அமையும். அகில இந்திய அளவில் (உலகளாவிய அளவில்) நம் மாணவர் போட்டித்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், வெற்றிபெறும் அளவையும் நிச்சயமாக உயர்த்தும்.

 

 

 

மூன்றாம் பருவ முடிவில், மூன்றாம் பருவ பாடப்பகுதியில் சிறு வினாக்கள், குறு வினாக்கள் மற்றும் பெரு வினாக்கள் கொண்ட, இப்போதையத் தேர்வு போலவே நடத்தலாம். மாணவர்களின் எழுத்துப் பயிற்சியும், எழுத்தாற்றலும் வளரும். அவ்விடைத்தாள்களை இப்போது நடைமுறையில் உள்ளதைப் போன்றே ஆசிரியர்களைக் கொண்டு திருத்தலாம்.

 

முதலிரண்டு பருவங்களின் பாடப்பகுதி அடிப்படைப் பாடங்களை அதிகமாகக் கொண்டதாகவும், மூன்றாம் பருவப் பாடப்பகுதி புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகவும், பயன்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கலாம்.

 

மாணவர்கள் ஏற்கெனவே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்தேர்வு எழுதி பழக்கம் [பயிற்சிப்] பெற்றவர்களே! அவர்களுக்கு இத்தேர்வுகளைப் பற்றிய பயமோ, சிரமமோ இல்லை. மூன்று முறை பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அகலும்.

 

மூன்றாம் பருவங்களின் முடிவில், நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள், 50% வினாக்கள் மிக எளிமையானதாகவும், 20% வினாக்கள் சற்று கடினமானதாகவும், 20% வினாக்கள் கடினமானதாகவும் (புத்தகத்தில் உள்ள வினாக்கள்), 10% வினாக்கள் மிகவும் கடினமானதாகவும் (புத்தகத்தில் இல்லாத வினாக்களாகவும்) இருக்க வேண்டும். மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடும் தேர்வாக மட்டுமே தேர்வு அமையக் கூடாது. அப்பொழுதுதான் மாணவர்களின் தரம் முழுமையானதாக மதிப்பீடு செய்யப்பட்டதாக அமையும்.

 

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தி, அதற்கான மதிப்பெண்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிடுவதைப் போலவே வளரறி மதிபெண்களையும், அதற்கான தரத்தையும் ஒப்படைத்துவிடலாம்.

 

மூன்று பருவங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு, இப்போது மற்ற வகுப்புகளுக்குச் செய்வது போலவே சராசரி கண்டுபிடித்து தரம் வழங்கலாம். கல்வித்தரம் சிறிதும் பாதிக்கப்படாது. ஒரு பருவத்தேர்வை சரியாக எழுதாதவர் அல்லது தேர்வை எழுத முடியாதவர்கள் அடுத்தத் தேர்வினை நன்முறையில் எழுத வேண்டும், அதிக மதிபெண் பெற வேண்டும்  என்ற எண்ணம் உருவாவதால் மாணவரின் கற்றல் திறனும் மேம்படும். இடைநிற்றலும் குறையும் அல்லது இருக்காது.

 

மதிப்பெண் சான்றிதழில் வளரறி மதிபெண்களுக்கான தரத்தையும், தொகுத்தறி மதிபெண்களுக்கான தரத்தையும் அச்சடித்துக் கொடுக்கலாம். அதனால் மாணவரின் கல்வித்தரத்தினை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

 

அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவில் கணினி மையங்களை அமைத்து, OMR coding sheet ஐத் திருத்தவும், ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் வளரறி மதிப்பெண்களையும், மாணவர்கள் பெற்ற தொகுத்தறி மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதும் எளிதே!

 

மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தற்போதுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிடலாம். அப்பள்ளிகளை இதுவரை கவனித்து வந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் உருவாக்கப்படும் கணினி மையங்களை ஒப்படைத்து விடலாம்.

 

எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும், சில பல உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளதைப்போன்றே, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கலாம். ஒவ்வொரு பருவ முடிவிலும் OMR coding sheet ஐத் திருத்துதல், ஆண்டு இறுதியில் தொகுப்பு மதிபெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பிற பணிகளுக்கு அவ்வாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாசிரியர்கள் மூலம் கணினி கல்வி கற்ற, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விலையில்லா கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி கல்வி கற்கவும் நல்ல வாய்ப்பு உருவாகும்.

 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் [Trimester pattern and CCE] இடைநிலைப் பள்ளி அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்.

 

மாணவர்களைத் திட்டக் கூடாது, கண்டிக்கக்கூடாது என ஆசிரியர்கள் கையைக் கட்டிப்போட்டதால், மாணவர்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் குறைந்துவிட்டது. மாணவர்களிடையே ஒழுங்கீனமும், கீழ்படியாமையும் அதிகரித்துவிட்டது. எந்த ஆசிரியரும் காலையில் எழுந்தவுடன், இன்று யாரையாவது அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறானவர்களே என எண்ணுவதும் தவறே!

 

ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பைக்காட்டி, பொறுமையாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற முடிவை எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வகையான மாணவர்களுக்கும் செயல்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதற்கு பல காரணங்கள் (ஆசிரியர் எண்ணிக்கை குறைவு, மாணவர் எண்ணிக்கை அதிகம், ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்கள், இன்ன பிற…) உள்ளன. எனவே, ஆசிரியர்கள் கண்டிப்பையும், கவனிப்பையும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஆசிரியர்களிடமிருந்து கண்டிப்பையும், பிரம்பையும் அகற்றியதன் விளைவு மாணவர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. சிறு சிறு கண்டிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் கூட மாணவர்கள் விபரீத முடிவை நாடுகின்றனர். மாணவர்களிடையே சமூக அக்கறையின்மையும், சுயநலமும், பொறுப்பற்றத்தன்மையும் அதிகரித்துவிட்டது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால், போலீஸின் கைகளில் உள்ள பிரம்பிற்கு வேலை அதிகரித்துவிட்டது. மாணவர்கள் சில ஆசிரியர்களைத் (பேராசிரியர்களைத்) தாக்குவது, முதல்வர்களைக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடிகின்றனர்.

 

அனைவருக்கும் கல்வித் திட்டமும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமும் நடைமுறையில் உள்ளதால், நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவோம்! தோல்வியடைய மாட்டோம்! நாம் படிக்கவிலை என்றாலும், தேர்வை சரியாக எழுதவில்லை என்றாலும், தேர்வையே எழுதவில்லை என்றாலும் நம்மை ஆசிரியரால் தோல்வியடையச் செய்ய முடியாது என்பதை அறிந்த சில மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களை சில மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எவ்வகையிலும் ஆசிரியர் கூறுவதைச் செய்வதில்லை. இத்தகைய மாணவர்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆசிரியர் மாணவர் உறவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய குறைகளை உரிய வகையில் தீர்க்க வேண்டும். இது அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.

 

S. ரவிகுமார், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அரங்கல்துர்கம், வேலூர் மாவட்டம் – 635811

sivaravi196310@gmail.com, Mobile No. 9994453649

Advertisements

About srk1963

HIGH SCHOOL TEACHER. I WANT SHARE MY THOUGHTS TO OTHERS.
This entry was posted in EDUCATION - கல்வி. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s